
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பலர் அடுத்த 2 வாரங்களுக்குள் தங்கள் வாதத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 6-ந்தேதிஇடிக்கப்பட்டது. இந்த இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 19 பேர் மீது கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
விடுதலை
ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ல் உறுதி செய்தது.
நிலுவை
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் பாபர் மசூதி ஹாஜி மகமூப்அகமது(இறந்துவிட்டார்) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
இரு வழக்குகள்
இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டது தொடர்பான வழக்குரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அத்வானி உள்ளிட்ட 13 பேர் விடுக்கப்பட்டனர்.
அதேசமயம், கட்டிடத்தை இடித்தது தொடர்பான அடையாளம் தெரியாத கரசேகவர்கள் மீதான வழக்கு லக்னோவில் நடந்தது.
இந்த இரு விதமான வழக்கில், பல்வேறு நபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வெவ்வேறு இடத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இதை ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
ஏப்.6-ந்தேதிக்கு மாற்றம்
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எப். நாரிமன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜனதா தலைவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், மற்றொரு அமர்வில் தான் ஆஜராக இருப்பதால், தனக்கு அனுமதி தேவை எனக் கோரினார்.
இதைத் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 6-ந் தேதிக்குள் அனைத்து தரப்பினரும், தங்களின் வாதங்களை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 7-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர்.