முகம்மது நபிகள் குறித்து விமர்சித்து இருந்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது பலமுறை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் ஏன் டெல்லி போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் இன்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட நுபுர் சர்மா குறித்து இன்று உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தது. தனிப்பட்ட நபராக ஜெய்ப்பூரில் நடந்த சம்பவத்துக்கு அவர் மட்டுமே காரணம் ஆகிறார் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்து இருந்தது.
அவரது பேச்சுதான் இந்தியாவில் போராட்டங்களுக்கு தூண்டியுள்ளது. இங்கு மட்டுமில்லை ஐக்கிய அரபு அமீரகத்திலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அஜாக்கிரதையான பேச்சு இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்களுக்கு காரணமாகிறது.
தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டது மிகவும் தாமதம். அதேபோல் வாபஸ் பெற்றதும் தாமதம். அவர் மீது பல முறை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்று வரை அவரை டெல்லி போலீசார் கைது செய்யவில்லை. தரமற்ற விளம்பரத்திற்காக அவர் அவ்வாறு பேசி இருக்க வேண்டும். அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது ஏன் அவர் இதுவரை புகார் கொடுக்கவில்லை.
பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற ஆணவம் மற்றும் பிடிவாதம் அவரை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்துள்ளது. அதிகாரம் அவரது தலைக்கு ஏறி இருக்கிறது. கடந்த பத்து ஆணடுகளாக வழக்கறிஞராக இருந்தும், பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிபதி சூர்ய காந்த் கண்டித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருப்பதால், அவர் மீதான வழக்குகளை டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.