152   ஆண்டுகளுக்குப்  பிறகு வரும்  அபூர்வ சந்திர கிரகணம்…  வதந்திகளை நம்பாமல் எல்லோரும் பாருங்க !! 

 
Published : Jan 31, 2018, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
152   ஆண்டுகளுக்குப்  பிறகு வரும்  அபூர்வ சந்திர கிரகணம்…  வதந்திகளை நம்பாமல் எல்லோரும் பாருங்க !! 

சுருக்கம்

super Moon today all are see this moon

அடுத்த சில மணித்துளிகளில்  நிகழப்போகும் முழு சந்திர கிரகணத்தை குறித்து உலகமே பரபரப்பாக பேசி வருகிறது. “சூப்பர் மூன்” என்கிறார்கள், “புளூ மூன்” – நீல நிலவு என்கிறார்கள், “சிவந்த நிலா” – தாமிர நிலவு என்கிறார்கள், 152 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அதிசயம் என்கிறார்கள்… என்ன தான் நடக்கப்போகிறது  இன்று ?

சிவப்பு நிலா…

இன்று  நிலா உதிக்கும்போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும். அந்த சமயத்தில் சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால், நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல் படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. எனவே தான் அது ’சிவப்பு நிலா’வாக தோன்றுகிறது.

முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse)சிவப்பு நிலா:  மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை

பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse): இரவு 7.37மணி முதல் 8.41மணி வரை

அரிநிழல் கிரகணம் (Penumbral Eclipse)   இரவு 8.41 மணி முதல் 9.38 மணி வரை

மாலை 5.18க்கு பூமியின் நிழல் நிலவின் மேல் மெதுவாக விழ ஆரம்பிக்கும். இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது. மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் முழுதாக நிலவை மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம்.

இரவு 7.37 மணி முதல் இந்த நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். பூமியின் நிழல் விலகிவிட்டாலும், அதன் அரிநிழல் நிலவின் மேல் படுவதால் முழு பிரகாசத்துடன் ஒளிராது. இரவு 9.38 மணிக்கு இந்த அரிநிழலும் விலகும்போது நிலவு அதன் முழு ஒளியுடன் சூப்பர் நிலவாக ஜொலிக்கும்.

கிரகணம் எப்படி ஏற்படுகிறது தெரியுமா?

ஒரு காலத்தில், நிலாவை பாம்பு விழுங்குவதால் தான் முழுநிலா திடீரென மறைந்து போகிறது என்று மக்கள் நம்பினார்கள். அதற்கு ஆதாரமாக தேவர்கள், அசுரர்கள், ராகு, கேது என்று ஏதேதோ கதைகளையும் சொன்னார்கள். ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியால் அவை கட்டுக்கதைகள் என்பதும் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பதும், பள்ளிப்பிள்ளைகளுக்குக் கூட தெரிந்துவிட்டது.

நிலா தானாக ஒளி விடுவதில்லை, அது சூரியனின் ஒளியைத் தான் எதிரொளிக்கிறது என்பதும் நாம் அறிந்தது தான் அல்லவா? பூமி சூரியனைச் சுற்றிவருவதும், நிலா பூமியை சுற்றிவருவதும் நாம் அறிந்தது தான். அப்படி சுற்றும்போது ஏதோ ஒரு சமயத்தில் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

அப்போது பூமியானது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதாக வைத்துக் கொள்வோம். நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரியவெளிச்சம் பூமியால் தடுக்கப்படுகிறது.

அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலில் இருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதனைத் தான் நாம் சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்கிறோம்.

சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போது தான் சாத்தியம் என்பதால் எப்போதும் பௌர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் ஏற்படும்.

இதே போல, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது அந்த நிலா, சூரியனை நமது பார்வையில் இருந்து சிறிது நேரத்திற்கு மறைத்து விடுகிறது. இதுவே சூரிய கிரகணம் (Solar Eclipse).  சூரியன் இருக்கும் திசையிலேயே நிலவு இருக்கும்போது தான் சாத்தியம் என்பதால் எப்போதும் அமாவாசை நாளில் தான் சூரிய கிரகணம் ஏற்படும்.

அதென்ன சூப்பர் நிலவு….?

இது, கிரகணத்துடன் தொடர்பற்ற மற்றொரு வானியல் நிகழ்வு. ஆம், இந்த சூப்பர் மூன் நாளில் நிலவு வழக்கத்தைவிட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

அதெப்படி என்கிறீர்களா?

பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது என்பது நாம் அறிந்தது தானே? அதுபோலவே, நிலவும் பூமியை நீள்வட்டப்பாதையில் 27.3 நாட்களில் சுற்றிவருகிறது. அப்படி சுற்றும்போது ஒரு சமயம் பூமிக்கு மிக அருகிலும் (அண்மைநிலை Perigee) ஒரு சமயம் பூமியிலிருந்து மிக தொலைவிலும் (சேய்மைநிலை Apogee) அமைகிறது.

அப்படி அண்மைநிலையில் வரும் நாள் பௌர்ணமியாக இருந்தால், அந்த நிலவு வழக்கத்தைவிட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும். இதையே நாம் சூப்பர் நிலவு என்கிறோம். 

நிலவு நீல நிறமாக தோன்றுமா?

இல்லை. நீல நிலவு என்பது வானியல் நிகழ்வு அன்று. அது ஒரு பேச்சு வழக்கு. ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பௌர்ணமி பேச்சு வழக்கில் நீல நிலவு (புளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் நிலவின் இயக்கத்தை வைத்தே மாதத்தைக் கணக்கிட்டனர். எனவே ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி தான் வரும். (ஆங்கிலத்தில் Month என்ற சொல், Moon என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான். அது போலவே திங்கள் என்ற தமிழ்ச்சொல் நிலவு, மாதம் இரண்டையும் குறிக்கும்.)

ஆனால், இந்த மாதத்திற்கு 29.5 நாட்கள் தான். அதாவது, 12 மாதத்திற்கு 354 நாட்கள். பிற்காலத்தில், ஆண்டின் 365 நாட்களை 12 மாதங்களாக மாற்ற, மாதத்தின் நாட்களை 30, 31 என்று அதிகப்படுத்தினர். இப்படி செய்ததால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும்.

இப்படி ஒரே மாதத்தில் இரண்டாவதாக வரும் பௌர்ணமி தான் பேச்சு வழக்கில் நீல நிலவு (புளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது.

முழு சந்திர கிரகணம், சூப்பர் நிலவு, நீல நிலவு இவை வழக்கமாக வரும் நிகழ்வுகள் தான் என்றாலும், அவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிதான நிகழ்வு. 152 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நிகழ்வு  இன்று ஏற்படவுள்ளது இதன் தனிச்சிறப்பு.

கிரகணம் என்பது வழக்கமாக பூமி, சந்திரன் இவை சுற்றும்போது ஏற்படும் நிழல் விளையாட்டு தான் என்பதால், அந்த சமயத்தில் நாம் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கருவுற்ற தாய்மார்கள் வெளியில் வருவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நாம் உணரவேண்டும்.

அதுவே அறிவியல் வளர்ச்சியின் பலன். சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணாலேயே காணமுடியும். எந்த வித பாதுகாப்பு சாதனமும் தேவையில்லை. எனவே, எந்த வித பயமும் இன்றி இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டு களிக்க வாருங்கள்...!

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!