
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி, தனது தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை
"இந்த முடிவை ஜனநாயக வழிமுறைகள் மீதும், நமது மகத்தான குடியரசின் மீதும் நான் வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது வாழ்க்கைக்கு வழிகாட்டிய அரசியலமைப்பு அறநெறி, நீதி மற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் கண்ணியம் ஆகிய விழுமியங்களுக்காக நிலைநிற்க எனக்கு ஒரு வாய்ப்பை இந்த பயணம் வழங்கியது. முடிவு என் பக்கம் இல்லை என்றாலும், ஒரு பெரிய காரணத்திற்காக நாம் கூட்டாக இணைந்து செயல்படுவதைத் தொடர்வோம். கருத்தியல் ரீதியிலான போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தனக்கு ஆதரவு அளித்தமைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், மக்களாட்சி என்பது வெற்றி, பேச்சுவார்த்தை, கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றால் பலப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசத்திற்கு வழிகாட்டு ஒளி
மேலும், "நான் ஒரு குடிமகனாக, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதில் உறுதியுடன் இருப்பேன். நமது அரசியலமைப்பு நமது தேசத்தின் வழிகாட்டும் ஒளியாகத் தொடரட்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பதவிக்காலத்தைத் தொடங்கும் வேளையில், அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் சுதர்ஷன் ரெட்டி கூறியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், அபார வெற்றி பெற்று இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். அவர் 452 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார்.