
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் இதுநாள் வரை இச்சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் டபுள் ஸ்டேண்ட் கொள்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கொட்டு வைத்திருந்தது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தமிழகத்தில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தொடர்ந்து உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.