
பள்ளியை தரம் உயர்த்தக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கோதேரா தாப்பா தேகானா என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவிகள் கான்வாலியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் ஈவ்-டீசிங் செய்வதாக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் அதை கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
அதில் அவர்களின் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆனால், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற போவதில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.