வேலை இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை..! எச்சரித்த மத்திய அரசு..!

By Manikandan S R SFirst Published May 20, 2020, 11:38 AM IST
Highlights

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படி பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்புவது சட்டப்படி அபராதம் விதிக்கக்கூடிய குற்றம் ஆகும். எனவே மத்திய அரசு அலுவலகங்களில் எச்சில் துப்புவது தடுக்கப்பட வேண்டும். எச்சில் துப்பாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தல்களை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1,06,750 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 3,303 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 140 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் எளிதில் பிறரிடம் இருந்து பரவாமல் இருக்க சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், வாய், மூக்கு போன்ற பகுதிகளை தொடுவது கூடாது என பல அறிவுரைகளை மருத்துவர்களும் வழங்கி வருகின்றனர். இதனிடயே பொது இடங்களில் சுகாதராத்தை கேடுக்கும் வகையில் எச்சில் துப்புவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. மீறபவர்கள் மீது அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு அலுவலங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறைகளுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில் கூறி இருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படி பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்புவது சட்டப்படி அபராதம் விதிக்கக்கூடிய குற்றம் ஆகும். எனவே மத்திய அரசு அலுவலகங்களில் எச்சில் துப்புவது தடுக்கப்பட வேண்டும்.

எச்சில் துப்பாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு ஊழியருக்கும் மற்றொரு ஊழியருக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இதேபோல் ஒரு ஷிப்டுக்கும் மற்றொரு ஷிப்டுக்கும் இடையே போதுமான நேர இடைவெளி இருக்க வேண்டும். கதவுகள், கைப்பிடிகள் உள்பட ஒட்டுமொத்த அலுவலகத்தையும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த திங்கள்கிழமை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!