காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது - வருமான வரித்துறை!

By Manikanda Prabu  |  First Published Apr 1, 2024, 12:42 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது


காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை தீர்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே, ரூ.1823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 4 நிதி ஆண்டுகளில் ரூ.1823 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக வருமான வரி துறை பிடித்தம் செய்துள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கம் மற்றும் வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, காங்கிரஸிடம் இருந்து ரூ.1823 கோடியை வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் எந்த கட்சிக்கும் பிரச்சினை ஏற்படுத்த விரும்பவில்லை என வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்த வழக்கில் வேறு எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கவில்லை, இடைக்கால நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!