
குஜராத்தின் மாநிலம் காண்ட்லாவில் இருந்து மும்பைக்கு 75 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் பாம்பார்டியர் Q400 விமானம் புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தின் சக்கரம் ஒன்று தனியாக கழண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த விமானம் மும்பைக்கு தனது பயணத்தை தொடர்ந்து பத்திரமாக தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஜெட் விமானம் பத்திரமாக தடையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் மும்பை விமான நிலையத்தில் எமர்ஜென்சி போடப்பட்டது. அங்கு இருந்து சிறிது நேரம் எந்த விமானங்களும் புறப்படவில்லை. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருந்தனர். இதனைத் தொடர்ந்து சக்கரம் கழண்டு விழுந்த ஸ்பைஜெட் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் Q400 விமானம் புறப்பட்ட பிறகு அதன் வெளிப்புற சக்கரம் ஓடுபாதையில் காணப்பட்டது. விமானம் மும்பைக்கு தனது பயணத்தைத் தொடர்ந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. சீராக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானம் அதன் சொந்த சக்தியின் கீழ் முனையத்திற்குச் சென்றது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வந்து சேர்ந்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஸ்பைஜெட் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்காக மும்பை விமான நிலையத்தில் எமர்ஜென்சி போடப்பட்டதால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். ஸ்பைஜெட் விமானம் எந்த வித பிரச்சனையுமின்றி நல்லபடியாக தரையிறங்க வேண்டும் என அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உறவினர்கள் தங்கள் கடவுளை வேண்டிக் கொண்டனர். விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகே அவர்கள் நிம்மதி அடைந்தனர்.