
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று வரை ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் இரு நாடுகளை சேர்ந்த பலரும் இந்த போரில் உயிரிழந்தனர். இருந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது. இதனிடையே கடுமையான போர் சூழல் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால் அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டன. இவை தவிர இந்திய விமானப்படையும் இந்த மீட்பு பணியில் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
இதன் மூலம் அனைத்து இந்திய மாணவர்களும் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கக்கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மேலும் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.