
டெல்லி, பஞ்சாப்பைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் தடம் பதித்து ஆட்சியைக் கைப்பற்றும் பணிகளை ஆம் ஆத்மி தொடங்கியிருக்கிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பை முதன் முறையாக ஆம் ஆத்மி கைப்பற்றியது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜக, காங்கிரஸ் வரிசையில் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சியானது ஆம் ஆத்மி. ஏற்கெனவே டெல்லியில் 2015, 2020 என தொடர்ந்து இரு முறை ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றிய நிலையில், பஞ்சாப்பில் கிடைத்த வெற்றி அக்கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இதனையடுத்து பல மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் வழிமுறைகளை ஆம் ஆத்மி உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.
இதன்படி டெல்லி, பஞ்சாப்பைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் களமிறங்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகும் வகையில் ராஜஸ்தானில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கை இதற்காக ராஜஸ்தானுக்கு அனுப்பியுள்ளது கட்சி தலைமை. வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் இரண்டு நாள் கட்சி மாநாட்டை ஆம் ஆத்மி நடத்துகிறது. இந்த மாநாட்டில் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற் உள்ளார். மேலும் ராஜஸ்தானுக்கு மேலிட பொறுப்பாளரை நியமிக்கவும், புதிதாக மாநில தலைவரை நியமிக்கவும் ஆம் ஆத்மி முடிவு செய்திருக்கிறது.
டெல்லிக்கும் பஞ்சாப்புக்கும் அருகே ராஜஸ்தான் இருப்பதால், அங்கும் தங்களால் கட்சியை வலுப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று ஆம் ஆத்மி நினைக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 142-இல் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் 0.40 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. என்றாலும், காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக தங்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.