
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாம் மாணவிகள் பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று தொடர் போரட்டங்கள் நடத்தினர். இந்தியா முழுவதும் முஸ்லிம் மாணவிகளின் போராட்டங்கள் பெரும் பேசு பொருளானது. இதனை எதிர்த்து, சில இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து, போராட்டத்தில் குதித்தனர். இதனால் இந்து - முஸ்லிம் மத பிரச்சனையாக இது உருவெடுத்தது.
இதனால் பள்ளிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணை முடித்து தீர்ப்பளிக்கும் வரை, பள்ளிகளில் சீருடை மட்டுமே அணிந்து வர அனுமதியளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக இஸ்லாமிய மாணவிகள் 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்க கர்நாட்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும் தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்று தனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் உமாபதி குறிப்பிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து வழக்கறிஞர் உமாபதி நீதிமன்ற பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில், காலை 9.45 மணியளவில் வாட்ஸ் அப்பில் அனுப்பட்ட வீடியோவில் இருப்பவரி தமிழில் பேசுகிறார். மேலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் பொது கூட்டத்தில் பேசுவது போல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி மற்றும் பிறரை குறித்து கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபயற்சி மேற்கொண்ட போது நீதிபதி கொல்லப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அந்த மர்ம நபர்கள், கர்நாடக தலைமை நீதிபதி எங்கு நடைபயிற்சி மேற்கொள்ளுவார் என்பதும் தெரியும் என்று பேசியதாக கடிதத்தில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே, ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.