
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில், மகன் ஒருவர் தனது தாயின் உடலை முதியோர் இல்லத்திலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல மறுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது வீட்டில் திருமணம் நடைபெறுவதால், சடலத்தைக் கொண்டுவருவது 'அபசகுனம்' என்று மகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரைச் சேர்ந்த ஷோபா தேவி என்ற பெண், நீண்டகால உடல்நலக் குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மூத்த மகன் சடலத்தை உடனடியாக வீட்டுக்குக் கொண்டுவர மறுத்துவிட்டார்.
முதியோர் இல்ல நிர்வாகத்திடம் மகன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்ததாவது:
"நீங்கள் என் தாயின் சடலத்தை நான்கு நாட்களுக்கு டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள். இப்போதைக்கு வீட்டில் கல்யாண விழா நடந்து கொண்டிருக்கிறது. சடலத்தை இப்போது வீட்டுக்குக் கொண்டுவந்தால் அபசகுனமாகிவிடும். திருமணத்திற்குப் பிறகு நான் வந்து எடுத்துச் செல்கிறேன்."
மகனின் இந்த மனிதநேயமற்ற மறுப்பைக் கேட்ட முதியோர் இல்ல ஊழியர்கள், வேறு குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குப் பதிலாக, குடும்பத்தினர் ஷோபா தேவியின் உடலை புதைத்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்வதாக உறவினர்கள் கூறியதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தின் பின்னணி மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்த ஷோபா தேவியின் கணவர் பூவால் குப்தா கூறுகையில், "கோரக்பூரைச் சேர்ந்த நாங்கள் மளிகை வியாபாரிகளாக இருந்தோம். எங்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக, எங்களது மூத்த மகன் எங்களை வீட்டிலிருந்து துரத்திவிட்டார்.
இதனால் மனமுடைந்த நான், ராஜ்காட்டில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் அங்கு இருந்தவர்கள் என்னை சமாதானம் செய்து, அயோத்தி அல்லது மதுராவில் அடைக்கலம் தேட அறிவுறுத்தினர்," என்றார்.
அதன்பின்னர், பூவால் குப்தா மற்றும் ஷோபா தேவி ஆகியோர் அயோத்தி மற்றும் மதுராவில் அடைக்கலம் தேடிக் கிடைக்காததால், இறுதியாக ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தின் முகவரியைப் பெற்று அங்குச் சென்றனர்.
முதியோர் இல்ல உரிமையாளர் ரவி குமார் சௌபே, ஷோபா தேவிக்கு சில மாதங்களுக்கு முன்பு கால் வலி ஏற்பட்டது என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஷோபா தேவியின் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சையின் போது இறந்தார். பூவால் குப்தா, தனது இளைய மகனுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் மூத்த சகோதரரிடம் ஆலோசித்துவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்த இளைய மகன், மூத்த சகோதரர் தங்கள் மகனின் திருமணம் நடப்பதால், சடலத்தை நான்கு நாட்களுக்குப் பிறகுதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
ரவி சௌபே நேரடியாக மகனுடன் பேசியபோதும், அவர் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். வேறு உறவினர்கள் பார்த்துவிட்டுச் செல்ல விரும்பியதால், சடலம் ஜான்பூரிலிருந்து கோரக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குப் பதிலாக, மூத்த மகன் சடலத்தை அடக்கம் செய்துவிட்டார். "நான்கு நாட்களுக்குள் சடலத்தை பூச்சிகள் அரித்துவிடுமே" என்று பூவால் குப்தா வேதனை தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் இருந்தபோது, மகன்களில் இளையவர் மட்டுமே எப்போதாவது தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார் என்றும், குடும்பத்தில் வேறு யாரும் அவர்களைச் சந்திக்க வந்தது இல்லை என்றும் இல்ல உரிமையாளர் ரவி சௌபே தெரிவித்துள்ளார்.