
ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தங்கள் குறைகளை நேரடியாக மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க மொபைல்ஆப்ஸ் உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ், எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு போதிய மற்றும் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதே போன்று மேலும் 3 வீரர்களும் தங்கள் மேல் அதிகாரிகளின் முறைகேடுகள் பற்றி சமூகவலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டதால், நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் தங்களது குறைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது. அதற்கான தலைமையிடத்தில் முறைப்படி தெரிவிக்கவேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரித்து இருந்தார்.
இதைகருத்தில் கொண்டு மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 7.2 லட்சம் துணை ராணுவத்தினர் தங்களின் குறைகளைத் தெரிவிக்க மொபைல் ஆப்ஸ் உருவாக்குவது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெக்ரிஷி ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தை 3 மாதத்தில் முடிக்க மத்திய உள்துறை அமைச்சர் கெடு விதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. வீரர்கள் குறைகளை சமூகவலைத்தளங்களில் தெரிவிப்பதை தடுக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது