
சூரிய தகடு (சோலார் பேனல்) ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து பெங்களூரு நகர சிவில், செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் சோலார் பேனல் பதித்துத் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடிகள் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தன. இந்த வழக்கில் சரிதா நாயர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சோலார் பேனல் திட்டம் அமைக்க முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டிக்கு ரூ.1.60 கோடி லஞ்சம் கொடுத்ததாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் குருவில்லா என்பவர் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். தனது பணத்தை எஸ்.சி.ஓ.எஸ்.எஸ்.ஏ என்ற நிறுவனத்தின் பெயரில் டெபாசிட் செய்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.
கொச்சியைச் சேர்ந்த இந்த எஸ்.சி.ஓ.எஸ்.எஸ்.ஏ என்ற நிறுவனத்தின் இயக்குநர் பினு நாயர் குருவில்லாவை அனுகி சோலார் மின் திட்டத்தை அமைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு உதவியாக நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான ஆன்ட்ரூஸ் இருப்பார் என்றும் இவர், முதல்வர் உம்மண் சாண்டியின் உறவினர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உம்மண் சாண்டியின் உதவியாளர் என்று கூறிய தில்ஜித் என்பவரையும் இந்த திட்டத்தில் இணைத்து, முதல்வர் உம்மண் சாண்டி இந்த திட்டத்தை செயல்படுத்த லஞ்சம் கேட்டதாகக் கூறியுள்ளார் இதற்காக குருவில்லாவிடம் இருந்து ரூ.1.60 கோடி பணம் பெறப்பட்டுள்ளது.
ஆனால், சோலார் பேனல் திட்டம் செயல்படுத்தப்படாததையடுத்து, பணம் கேட்டு குருவில்லா முதல்வர் உம்மண் சாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.1.60 கோடியை 6 பேரும் திருப்பி அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உம்மண்சாண்டி தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாட்டீல் மோகன்குமார் பீமனகவுடா, உம்மண் சாண்டிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். மேலும், மனுதாரர் குருவில்லா ரூ.1.61 கோடி பணத்தை உம்மண் சாண்டியிடம் கொடுத்ததற்கான ஆதரங்கள், பரிமாற்றப்பட்ட ஆவணங்களும் இல்லை. . இதை கருத்தில் கொண்டு உம்மண்சாண்டியை விடுவிக்கிறேன். அதேசமயம், மற்ற 5 பேர்மீதான விசாரணை தொடரும் என தீர்ப்பளித்தார்.