அமேதி மக்களுக்கு ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி ஆகியோர் தீபாவளி பரிசு அளித்துள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி ஆகியோர் தீபாவளி பரிசளித்துள்ளது, 2024 பொதுத் தேர்தல் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராகுலை தோற்கடித்த அமேதியின் தற்போதைய பாஜக எம்பியான ஸ்மிருதி இரானி, அமேதி மக்களுக்கு தீபாவளி பரிசாக மொபைல் போன்கள், சுவர் கடிகாரங்கள் மற்றும் புடவைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், அமேதி தொகுதியை 3 முறை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ராகுல் காந்தி, தனது பங்கிற்கு மக்களுக்கு இனிப்புகளுடன் உடைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த பரிசு விநியோகத்தை உறுதிப்படுத்திய அமேதியின் பாஜக செய்தித் தொடர்பாளர் கோவிந்த் சவுகான், ஸ்மிருதியின் பரிசுகள் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய, வறிய மற்றும் உடல் ஊனமுற்ற மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார். “தேவைப்படுபவர்களுக்கு பரிசுகள் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.” என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பரிசுகள் விநியோகம் குறிப்பிட்ட ஒரு விழாவுக்கானது அல்ல எனவும், ஆண்டு முழுவதும் ஸ்மிருதியின் தன்னலமற்ற பொது சேவையின் ஒரு பகுதி எனவும் கோவிந்த் சவுகான் கூறியுள்ளார்.
சிப் டிசைன் ஸ்டார்ட்அப்களுக்கு அரசு போதுமான உதவி: கேடென்ஸ் டிசைன்!
மக்கள் தாங்கள் பெறும் பரிசுகளுக்கு கைமாறாக ஸ்மிருதிக்கு வாக்களித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பாஜகவின் முன்னாள் அமேதி மாவட்ட தலைவரான தயா சங்கர் யாதவ் கூறும் வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், அவருக்கு கோவிந்த் சவுகான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். “ஆண்டு முழுவதும் தொகுதி மக்களுக்காக உழைக்கும் ஸ்மிருதியிடம் மக்கள் இன்னும் நெருங்கி வர வேண்டும் என்று தான் அவர் சொல்லியிருக்கிறார்.” என சவுகான் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தொகுதியில் உள்ள சுமார் 5,000 வீடுகளுக்கு ராகுலின் பரிசுகள் அனுப்பப்பட்டதாக அமேதி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால் தெரிவித்துள்ளார். அமேதி மக்கள் ராகுலின் குடும்பம் போன்றவர்கள் என்றும், பண்டிகைகளின் போது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகள் அனுப்புவது வழக்கமான நடைமுறை என்றும் அவர் கூறினார்.
ஸ்மிருதி, ராகுல் ஆகியோரின் தீபாவளி பரிசுகள், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமேதி தொகுதியில் களம் காண்பது குறித்த ஊகங்களை தூண்டியுள்ளது.
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பதில் அக்கட்சித் தலைமை மவுனம் காத்து வரும் நிலையில், ஒரு காலத்தில் காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்த அமேதியை மீட்க அக்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.