
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் நகரில் பசு கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி வியாபாரி ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற விவகாரத்தில் உண்மை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் அவை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் உத்தரவிட்டார்.
அடித்துக் கொலை
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் நகரில் ஒருவர் 3 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஹரியானா சென்று கொண்டு இருந்தார். இதைப் பார்த்த பசுபாதுகாப்பாளர்கள் என்று கூறும் ஒரு கும்பல் அந்த வாகனத்தில் இருந்த 4 பேரையும் கீழே இழுத்துப்போட்டு தாக்கினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
பா.ஜனதா மாநிலங்கள்
இந்த விவகாரம் மாநிலங்கள் அவையில் நேற்று எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்தபின்,காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்த்ரி பேசுகையில், “ ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. பசுபாதுகாப்பாளர்கள் எனக் கூறும் ஒரு கும்பல், மாடுகள் ஏற்றிச்சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த 4 பேரை இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் பலியானார். இதே போன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத்திலும் நடக்கின்றன’’ என்றார். இவருக்கு ஆதரவாக மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தவறான தகவல்
இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ்நக்வி பதில் அளித்துப் பேசுகையில், “ இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அப்படி நடந்ததாக இங்கு கூறப்பட்டுள்ளது. இந்த அவையில் பசுவதைக்கு ஆதரவாக செய்தி கூறப்பட்டு விடக்கூடாது. இதை ராஜஸ்தான் மாநில அரசும் மறுத்துள்ளது. குண்டர்கள் செயலை நாங்கள் நியாயப்படுத்தவில்லை’’ என்றார்.
இதுபோல் எங்கும் இல்லை
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், “ அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசுவது வருத்தமளிக்கிறது. நியூயார்க் டைம்ஸ் நாளேடு கூட இது குறித்து தெரிவித்துள்ளது. அமைச்சருக்கு தெரியவில்லை. இதுபோன்ற அரசை நான் எங்கும் பார்த்தது இல்லை’’ என்றார்.
குரியன் உத்தரவு
இதன்பின் பா.ஜனதா எம்.பி.களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.களும் ஆவேசமாக பேசினர். இருதரப்பையும் சமாதானப்படுத்திய அவையின் துணைத்தலைவர் பி.ஜே. குரியன், “ நான் செய்தித்தாள் செய்திகளை நம்பமுடியாது. இதில் இரு வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் அது தீவிரமானது. இந்த சம்பவம் நடந்துள்ளதா இல்லையா என்பது குறித்து உள்துறை அமைச்சகம் மூலம் விசாரணை நடத்தி அவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.