
பல்வேறு தேசவிரோத குற்றச்செயல்களில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய மாணவ இயக்க அமைப்பை சேர்ந்த (சிமி) குற்றவாளிகள் , காவலரை கழுத்துஅறுத்து கொன்றுவிட்டு போபால் சிறையில் இருந்து தப்பினர். அவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுகொன்றனர்.
இதுபற்றி விவரம் வருமாறு, பல்வேறு குற்றச்செயல்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய மாணவ இயக்க (சிமி) குற்றவாளிகள், போபால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை சென்ட்ரல் ர யில் நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் அடக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிமி இயக்கத்தை சேர்ந்த 8 குற்றவாளிகள், சிறை காவலர் ஒருவரை, கூரிய ஆயுதத்தால், கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, சிறையில் வழங்கப்படும் போர்வைகளை, ஒன்றாக கயிறுபோல் திரித்து, சிறை சுவரில் வீசி, அதில் ஏறி தப்பி சென்றனர்.
தப்பி சென்ற 8 குற்றவாளிகளில் 2 பேர், சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பில் கைதான குற்றவாளிகள் ஆவர். 8 சிமி குற்றவாளிகள் தப்பி சென்றதையடுத்து, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
சிமி தீவிரவாதிகள், தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால், அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் தப்பி ஓடிய 8 சிமி பயங்கரவாதிகளை பிடிக்க, தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டது.
அப்போது தப்பி ஓடிய சிமி பயங்கரவாதிகள் அருகில் உள்ள இந்த்கெடி என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றனர் அப்போது போலீசார் அவர்களை சுட்டுகொன்றனர். இதில் 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.