ஹெலிகாப்டர் விபத்து… மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!!

By Narendran SFirst Published Dec 8, 2021, 8:44 PM IST
Highlights

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவ மதுலிக்கா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால் உட்படப் 13 பேர் உயிரிழந்துள்ளனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவத்தினர் உயிரிழப்புக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், பிபின் ராவத் மிக முக்கியமான பதவியில் இருந்ததால் அவரது இடத்தில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும்  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

click me!