தற்கொலைக்கு ஒரு மணி நேரத்துற்கு முன் 50000 பேருக்கு சம்பளம் போட்ட சித்தார்த்தா... சாவிலும் மாறாத நேர்மை..!

By Thiraviaraj RM  |  First Published Aug 1, 2019, 11:32 AM IST

கடிதம் எழுதி வைத்து விட்டு செல்லும்போது தனது நிறுவனத்தில் உள்ள 50000 மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை போட்டுவிட்டே தற்கொலை செய்ய வெளியேறி இருக்கிறார் சித்தார்த்தா. 



சித்தார்த்தாவின் சாவில் பல மர்ம முடிச்சுகள் விழுந்துள்ளன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. தனது ஒட்டு மொத்த பண நெருக்கடிக்கு வருமான வரித்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ஒருவரே காரணம் என விரல் நீட்டி இருக்கிற சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி. கடன்களை விட சொத்து மூன்று மடங்குக்கு அதிகம். கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவே இதை ஒப்புக்கொள்கிறார். “சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவரிடம் கடன்களை விட சொத்துகள் அதிகம் உண்டு” என்று அவர் சொல்லி இருக்கிறார்.

“மிகவும் எளிமையான மனிதர் சித்தார்த்தா. அவரை 35 ஆண்டு காலமாக நான் அறிந்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை தந்து அவர்கள் வாழ வழி ஏற்படுத்தி தந்தவர். அவரது துயரமான முடிவுக்கு பின்னணி என்ன என்பதை அரசு முறையாக விசாரித்து அறிய வேண்டும்” என்று குரல் கொடுத்திருக்கிறார் நாட்டின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா.

Latest Videos

undefined

சித்தார்த்தாவின் காபி டே குளோபல் லிமிடெட் கம்பெனி, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காபி எஸ்டேட்டுகளை சொந்தமாகக் கொண்டிருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே அரபிகா பீன்ஸ் காபி கொட்டை உற்பத்தியில் இந்த நிறுவனம்தான் நம்பர் 1. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என ஏற்றுமதி செய்கிறது.

1996 இதே ஜூலை மாதம் 11-ம் தேதி முதன் முதலாக பெங்களூருவில் காபி டேயை தொடங்கினார், சித்தார்த்தா. இணையதள சேவை பிரபலமாக தொடங்கிய அந்தக் காலத்தில் அந்த சேவையையும், காபியையும் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக வழங்கினார் சித்தார்த்தா. நாளுக்கு நாள் வளர்ந்தது, காபி டே. இந்தியாவில் மட்டும் இந்த மாத நிலவரப்படி 1,843 கிளைகள். உலக நாடுகள் பலவற்றிலும் பிரபலம் ஆகத் தொடங்கி வளர்ந்தது.

“இந்தியாவில் காபி பயன்பாடு பெருகியதற்கு தனி ஒரு மனிதராக சித்தார்த்தா தான் காரணம். அதில் சந்தேகமே இல்லை..” என்று பாராட்டுப்பத்திரம் வாசிக்கிறார் இந்திய காபி வாரியத்தின் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.எம்.கவேரப்பா. காபி டேயில் சித்தார்த்தாவுக்கு 35 சதவீத பங்குகள். குடும்பத்தினருக்கும், அவர்களுடைய கம்பெனிகளுக்கும் 15 சதவீத பங்குகள். 

இதற்கிடையே காபி துறையில் மட்டுமல்லாது, தகவல் தொழில் நுட்பத்துறையிலும் கால் பதித்தார். குளோபல் டெக்னாலஜி வெஞ்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அசுர வேகத்தில் வளர்ந்த காபி டே நிறுவனம்தான், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சமீப காலமாக சறுக்கத் தொடங்கி இருக்கிறது. தொழில் போட்டிகளின் அழுத்தம். ஒரு கட்டத்தில் தொடர் நஷ்டத்துக்கு வழிவகுத்தது. நிறுவனம் வீழ்கிறபோது, அதன் பங்குகளும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைவது இயல்பு. அது காபி டேவுக்கும் பொருந்தியது. இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிந்தது. இது அந்த மனிதருக்கு மன உளைச்சலை தந்துள்ளது.

அதனால்தான் காபி டேயை 1.45 பில்லியன் டாலருக்கு அதாவது சுமார் ரூ.10 ஆயிரத்து 150 கோடிக்கு விற்று விடலாம் என முடிவு செய்து கோகோ கோலா நிறுவனத்துடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இனியொரு விதி இல்லை என்கிற நிலையும் வந்திருக்கிறது, சித்தார்த்தாவுக்கு. அதன் உச்சம்தான், தற்கொலை என்ற முடிவுக்கு சித்தார்த்தாவை வழிநடத்தி உள்ளது.

ஆனால், கடன் தொல்லை மட்டுமே ஒரு சாம்ராஜ்யத்தை அசைத்து வீழ்த்தி விடுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதுவும் கடன் அளவை விட சொத்துகள் அதிகமாக இருக்கிறபோது, கடன் தொல்லைக்காக மட்டுமே தற்கொலை என்ற முடிவுக்கு ஒருவர் போவாரா? சித்தார்த்தா எழுதியதாக கூறப்படுகிற கடிதம் உண்மையிலேயே அவரால் எழுதப்பட்டதுதானா?

இந்த சந்தேகத்தை வருமான வரித்துறையும் கூட எழுப்பி இருக்கிறது. கடிதத்தில் உள்ள கையெழுத்து, சித்தார்த்தாவின் கையெழுத்து போல இல்லை; தங்களிடம் உள்ள ஆவணங்களில் உள்ள சித்தார்த்தாவின் கையெழுத்துடன் ஒத்துபோகவில்லை என்கிறது வருமான வரித்துறை.

ஆனால், கடிதத்தில் இடம் பெற்றிருக்கிற வார்த்தைகள் எல்லாமே சாட்சாத், சித்தார்த்தாவின் வார்த்தைகள் போலவே தோன்றுகின்றன. அப்படி அவரது கடிதம்தான் இது என்கிறபோது, இப்படி ஒரு கடிதம் எழுதிய சித்தார்த்தாவை எப்படி குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா, 2 மகன்கள் அமர்தியா, ஈசன் இன்னும் வாய் திறக்கவில்லை. அவர்கள் மவுன விரதத்துக்கு காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.

இதையும் படிங்க:- நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்யப்போகிறார் விஜய் மல்லையா..?

ஆனால், ஒரு விஷயத்தில் தனது நேர்மையையும், கடமையையும், இரக்கத்தையும் அவரது ஒரு செயல் நிரூபித்து இருக்கிறது. அவர் அவர் இறப்பதாக முடிவெடுத்து கடிதம் எழுதி வைத்து விட்டு செல்லும்போது தனது நிறுவனத்தில் உள்ள 50000 மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை போட்டுவிட்டே தற்கொலை செய்ய வெளியேறி இருக்கிறார் சித்தார்த்தா. இதனைக் கூறி அவரது தொழிலாளர்கள் கதறி கதறி கண்ணீர் விட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க:- இத்தனை ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டிலா..? காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் தகனம்..!

click me!