
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்
மத்திய அரசு தேர்வாணையம் சிவில் சர்வீஸ் 2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை இன்று www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வில் முதன்மைத் தேர்வு, ஏப்ரல் முதல் மே வாரத்தில் நடத்திய நேர்முகத் தேர்வு அடிப்படையில் இன்று இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. ஐஏஎஸ் ஐஎஃப்எஸ் ஐபிஎஸ் மற்றும் மத்திய பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என 749 பணியிடங்களுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த முறை, யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.அங்கிதா அகர்வால் இரண்டாவது இடத்தையும், காமினி சிங்லா மூன்றாவது இடத்தையும்,ஐஸ்வர்யா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். அதே சமயம்,தமிழகம் அளவில் ஸ்வாதி ஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஆனால்,இவர் தேசிய அளவில் 42 வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஸ்ருதி ஷர்மா ?
யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி ஷர்மா. இவர் யார் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரை சேர்ந்தவர் ஸ்ருதி சர்மா. டெல்லியில் தனது கல்வியை முடித்துள்ளார்.
அவர் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். ஸ்ருதி ஷர்மாவின் வயது 26. கடந்த 10 மாதமாக தீவிர யுபிஎஸ்சி தயாரிப்பு தான் அவரை இந்திய அளவில் முதலிடம் கொண்டு வந்துள்ளது என்கின்றனர் அவரது குடும்பத்தினர். இவரது தந்தை பெயர் கே என் ஷர்மா. இவர் ஒரு மருத்துவர். இவரது தாய் சந்தோஷ் சர்மா ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். ஸ்ருதியின் இந்த மிகப்பெரிய சாதனைக்கு பெற்றோரின் ஆதரவு, வழிகாட்டுதல், ஆசீர்வாதம் மற்றும் தீவிரமான உழைப்பு என்று பலவகை காரணங்கள் உள்ளது.
முதலிடம் பிடித்த ஸ்ருதி ஷர்மா
மக்களுக்காக நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று ஸ்ருதியின் மனதில் தோன்றியபோது அவள் முடிவு செய்தது யுபிஎஸ்சி தேர்வினை தான். யுபிஎஸ்சி தேர்வு மட்டுமல்லாமல் எந்தவொரு தேர்வுக்கும் தயாராகும் போட்டி தேர்வாளர்களுக்கு ஸ்ருதி கொடுக்கும் சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம். முதலில் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ள வேண்டும். முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு எதுவாக இருந்தாலும், மன உறுதியுடன் தேர்வுக்கு படிக்க வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வு - வெற்றிக்கான காரணம்
பாட புத்தகங்கள் மட்டுமில்லாது, செய்தித்தாள், மற்ற புத்தகங்கள் என எல்லாவற்றையும் தேர்வு நோக்கில் மட்டுமில்லாமல் பொது பார்வையில் படிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஸ்ருதி கணினி அறிவியலில் பி.டெக் படித்துள்ளார். அவர் சில மாதங்கள் விரிவுரையாளராக இருந்து, பின்னர் விப்ரோவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக சேர்ந்தார். அவரது விருப்பப் பாடங்கள் பொது நிர்வாகம் மற்றும் வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
தன் விடாமுயற்சியாலும் அனைவரையும் தற்போது வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஸ்ருதி. இந்தத் தேர்வு பல சவால்கள் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளைக் கொண்டுவருகிறது என்பது உண்மைதான், ஆனால் பலர் தங்கள் கனவை நோக்கி தங்கள் வழியைக் கண்டுபிடிக்க இந்த பாதிப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள். தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும் தேர்வினை எதிர்கொண்டால் வெற்றி எளிதில் சாத்தியமே என்று கூறுகிறது ஸ்ருதி ஷர்மாவின் வெற்றி.
இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !
இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !