
ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டிற்கு ஆதரவு தெரிவித்து சிவசேனை கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெய்க்வாட்..
டெல்லிக்குச் செல்வதற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சொகுசு இருக்கையை முன்பதிவு செய்தியிருந்தார். இந்நிலையில் புனே விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் எக்கனாமிக் கிளாஸ் இருக்கைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பயணத்தை தொடர்ந்தார்.
டெல்லி சென்றடைந்ததும், விமானத்தை விட்டு கீழே இறங்காமல் தகராறு செய்த கெய்க்குவாட்டுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சுகுமாரை கெய்க்வாட் சுமார் 25 முறை காலணியால் தாக்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் விஸ்வரூபமாக வெடிக்க, தனது செயலுக்கு மன்னிப்புக்கோர மாட்டேன் என்று அறிவித்து பரபரப்பு கூட்டினார். இதனைத் தொடர்ந்து விமானத்தில் பறக்க அவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தன்னிடம் விமான டிக்கெட் இருப்பதகாவும், யாரும் எனது பயணத்தை தடுக்க முடியாது என்றும் ரவீந்திர கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே தனது கட்சியைச் சேர்ந்த எம்.பி.ரவீந்திர கெய்க்வாட்டிற்காக உஸ்மானாபாத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு சிவசேனை அழைப்பு விடுத்துள்ளது. இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் பிரச்சனையை எழுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது.