
மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமானால், பெண்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் கிரிஷ் மஹாஜன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா, சிவ சேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். அதில் அரசில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் கிரிஷ் மஹாஜன்.
கடந்த சனிக்கிழமை சர்க்கரை நிறுவனம் சார்பில நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கிரிஷ்மஹாஜன் கலந்து கொண்டு ‘மஹாராஜா’ என்ற ெபயரில் மது ஒன்றை அறிமுகம் செய்தார். அப்போது பேசுகையில், “ மக்கள் மத்தியில் மதுவின் தேவையை அதிகரிக்க வேண்டுமென்றால், பெண்களின் பெயரை சூட்டுங்கள். அதன்பின் தேவை எப்படி உயர்கிறது என்று பாருங்கள்’’ என்று பேசினார்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் சந்தர்பார்மாவட்ட போலீசில் அமைச்சர் கிரிஷ் மஹாஜனுக்கு எதிராக புகார் செய்தார். மேலும், சிவசேனாகட்சியும் தனது சாம்னா நாளேட்டின் தலையங்கத்தில் அமைச்சர் கிரிஷ்க்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
மன்னிப்பு கோரினார்
நாளுக்கு நாள் பிரச்சினை பெரிதாவதையடுத்து, அமைச்சர் கிரிஷ் மஹாஜன் நேற்று தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரினார். இது குறித்து மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ நான் பெண்கள் குறித்த பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு மன்னிப்பும் கோருகிறேன். நான் பெண்களை களங்கப்படுத்தும் நோக்கில் அப்படி பேசவில்லை. அது எனது எண்ணமும் இல்லை. உள்நோக்கமில்லாமல் பேசியது தவறாக எடுக்கப்பட்டுவிட்டது, யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்துடன் பேசவில்லை’’ என்று தெரிவித்தார்.