
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரஷ்யா உக்ரைன் போர் குறித்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிகவும் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு பின்னால் இருந்த சசி தரூரும், சுப்ரியாவும் ஏதோ அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போல் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலையும், காட்டு சிறுக்கி பாடலை இணைத்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் காங்கிரஸ் எம்பி சசி தரூருடன் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பின்பக்கமாக திரும்பி பேசிக்கொண்டு இருந்தார். சரியாக கேட்க முடியாததால் சற்று நகர்ந்து பெஞ்சில் முகத்தை வைத்து சசி தரூர் அவருக்கு பதில் தந்து கொண்டு இருந்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் எம்.பி பரூக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்தார்.நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் மிக சிரியஸான டாபிக் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இவர்கள் இப்படி அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இரண்டு அரசியல் தலைவர்கள், அவையில் பேசிக்கொள்வது சகஜம் என்றாலும் இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான மீம்கள், சர்ச்சைகளுக்கு தற்போது சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்கள் சிலர் இப்படித்தான் பேசுவார்கள். அதுதான் அவர்களின் வேலை. நம் நாட்டில் சீதையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார்.நானும், சுப்ரியா சுலேவும் பேசிக்கொண்டதை பகிர்ந்து பலர் காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவையில் அவர் பாலிசி தொடர்பாக கேள்வி ஒன்றை கேட்க இருந்தார். அப்போது என்னிடம் அது தொடர்பாக சந்தேகம் கேட்டார். அடுத்து அவர்தான் கேள்வி கேட்க வேண்டும். அருகே பருக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கூடாது என்று அவர் அமைதியாக பேசினார். இதனால் நான் அவர் அருகே சென்று அவர் பேசுவதை கேட்டேன், என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி தொகுதி எம்பியாக இருப்பவர் சுப்ரியா சுலே. இவர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதி சரத் பவாரின் மகள் ஆவார். திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர். கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இதற்கு முன்னதாக மக்களவையில் பெண் எம்.பி க்களுடன் புகைப்படம் எடுத்த சர்ச்சையில் இவர் சிக்கியிருந்தார். மேலும் டிவிட்டரில், மக்களவையை யார் சொன்னது கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று அதான் இவர்கள் இருக்கிறார்களே என்று அதன் கீழே பெண் எம்.பி களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதையடுத்து , தன் கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.