
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களது ஒட்டுமொத்த உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசு செயல்படுத்தும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது விற்கப்படும் கொரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விரை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கும் ரூ.400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.