
காங்கிரஸ் கட்சியிலிருந்து, மூத்தத்தலைவர் மணிசங்கர் அய்யர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை தகாத வார்த்தைகளால் விமர்ச்சித்ததால் காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கர் இறந்தவுடன் அவரது கருத்துக்களை ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிதைத்துவிட்டதாகவும் ஆனால் மக்கள் மனதில் இருந்து அம்பேத்கரின் நினைவுகளை அழிக்க முடியவில்லை என்றும் பேசினார்.
காங்கிரஸ் கட்சி அம்பேத்காரின் புகழை இருட்டடிப்பு செய்ததாக மறைமுகமாக மோடி விமர்சித்தார்.
இதற்கு ‘நீச் ஆத்மி’ மோடி என்று மணி சங்கர் அய்யர் விமர்சித்தார். இது பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீச் என்றால் தீண்டதகாதவன் என்பது பொருள்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தம்மை தாழ்ந்தவர் என விமர்சிப்பது குறித்து கவலைப்படவில்லை என்றும், மக்களுக்காக தாம் ஆற்றும் பணி உயர்ந்தது என்றும் மோடி பதிலடி கொடுத்தார்.
இதைதொடர்ந்து ராகுல் காந்தியே, மணிசங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “பாஜக மற்றும் பிரதமர் மோடி மோசமான வார்த்தைகளை கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறது.
ஆனால் கட்சிக்கு வேறுவிதமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டது. மணிசங்கர் கூறியை வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியும் நானும் மணிசங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
ராகுலின் அறிவுறுத்தலின்படி தமது பேச்சுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் காங்கிரஸ் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு அவரது மொழியிலேயே பதிலளிக்க நேர்ந்ததாகவும் மணிசங்கர் அய்யர் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து, மூத்தத்தலைவர் மணிசங்கர் அய்யர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.