அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு விழா… - ஆசிரியையின் அன்பான அரவணைப்பு

By manimegalai aFirst Published Jun 20, 2019, 12:28 PM IST
Highlights

ஆண்டு இறுதி தேர்வு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை, புதுவகுப்பு புகுவிழா எனும் தலைப்பில், அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களே வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரியில், வகுப்பு தொடங்கிய முதல் நாளில் ஆசிரியர்கள், மாணவர்களை பல்வேறு முறையில் வரவேற்றனர்.

ஆண்டு இறுதி தேர்வு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை, புதுவகுப்பு புகுவிழா எனும் தலைப்பில், அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களே வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரியில், வகுப்பு தொடங்கிய முதல் நாளில் ஆசிரியர்கள், மாணவர்களை பல்வேறு முறையில் வரவேற்றனர்.

தனியார் பள்ளியின் மோகம் அதிகரித்துள்ளதால், அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை கல்வித்துறை சார்பில் ஏற்படுத்துகிறார்கள். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை புதுவகுப்பு புகுவிழா என்ற தலைப்பில், மாணவர்களை ஆசிரியர்களே, நூதன முறையில் வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை, பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அப்போது, 5ம் வகுப்பு ஆசிரியை சுபாஷினி, மாணவர்களுக்கு கை கொடுத்தல், கைத் தட்டி நடனமாடி இருவரும் இடித்துக் கொள்ளுதல், கட்டிப்பிடித்தல், கை தட்டிக் கொள்ளுதல் ஆகிய செய்முறைகளை படங்களாக வகுப்பறையில் ஒட்டியிருந்தார்.

அதில் எந்த முறையை மாணவர்கள் விரும்புகிறார்களோ, அந்த முறையில் தன்னுடன் மாணவர்களை விளையாட சொல்லி மாணவர்களை மகிழ செய்தார். பின்னர் மாணவர்களை, பாசத்துடன் கட்டி அணைத்து வரவேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

பெரும்பாலும் மாணவர்கள் வகுப்பறையில் நுழையும்போது அச்சத்துடன் செல்வார்கள். அந்த அச்சத்தை போக்கவும், ஆசிரியர்களிடம் உள்ள இடைவெளியை குறைக்கவும் இதுபோன்று மனம் நிறைந்த அன்புடன் செய்ததாக ஆசிரியை சுபாஷினி கூறினார்.

click me!