தெலங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை... ஒரு விவசாயி நடத்தும் கூத்து!

By Asianet TamilFirst Published Jun 20, 2019, 7:58 AM IST
Highlights

சிலை வைத்ததோடு விட்டிருந்தால் பராவாயில்லை. டிரம்பை கடவுளாகக் கருதி  சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினந்தோறும் வழிபட்டுவருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜையும் செய்கிறார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தெலங்கானவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்திவருகிறார்.
தெலங்கானாவில் ஜங்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த கொன்னே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா. 32 வயதான இவர் விவசாயி. இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர அபிமானி. எப்போதும் ட்ரம்பின் புகழ் பாடிக்கொண்டிருப்பாராம் இவர். இந்நிலையில் தனது வீட்டு வளாகத்திலேயே டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை வைத்து அசரடித்திருக்கிறார் இந்த மனிதர். இதற்காக 1.30 லட்சம் ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்.
பொது இடத்தில் சிலை வைத்தால், சிக்கலாகும் என்பதால், வீட்டுக்குள் சிலை வைத்திருக்கிறார் இவர். சிலை வைத்ததோடு விட்டிருந்தால் பராவாயில்லை. டிரம்பை கடவுளாகக் கருதி  சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினந்தோறும் வழிபட்டுவருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜையும் செய்கிறார். ஆரத்தி காட்டும்போது ‘ஜெய் டிரம்ப்’ என்று மந்திரமும் உச்சரிக்கிறார்.
ஜூன் 14 அன்று டிரம்பின் பிறந்தநாளையொட்டி வீட்டுச் சுவரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டியையும் புஸ்சா கிரு‌‌ஷ்ணா ஒட்டி இருந்தார். டிரம்ப் மீது ஏன் இவ்ளோ பாசம் என்று அவரிடம் கேட்டால், “டிரம்ப் ஒரு வலிமையான உலகத் தலைவர். அவருடைய துணிச்சல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன்” என்றார்.
ஈரானிடமிருந்து எரிபொருள் பெறுவதிலும் அமெரிக்க இருசக்கர வாகனங்களுக்கு அதிக வரி இந்தியாவில் வசூலிப்பதாகவும் டிரம்ப் அரசு இந்தியாவுடன் வர்த்தக மோதலை நடத்திவருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கு இந்தியர் ஒருவர் சிலை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!