
தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவிகள் இருவரின் சீருடையை அவிழ்த்து அரை நிர்வாணமாக தெருவில் துரத்திய அவலம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், பாட்னா அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தொழிலாளி ஒருவரின் இரண்டு மகள்கள் படித்து வந்தனர். அவர்களில் ஒரு பெண் நர்சரி வகுப்பிலும், வேறொரு பெண் ஒன்றாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.
இந்த நிலையில், பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அந்த தொழிலாளியால் சரிவர செலுத்த முடியவில்லை. இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் ஒரு விநோத உத்தரவை ஆசிரியர் ஒருவருக்கு கொடுத்துள்ளது. அதாவது அந்த இரு மாணவிகளின் சீருடையை அவிழ்த்து, அரை நிர்வாணமாக பள்ளியைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. அந்த ஆசிரியரும், நிர்வாகம் கூறியபடியே செய்துள்ளார்.
அந்த இரண்டு மாணவிகளும் அரை நிர்வாணத்துடன் சாலையில் சென்றுள்ளனர். குழந்தைகள் சாலையில் செல்வதைப் பார்த்த ஒருவர் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு உடை கொடுத்து உதவியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளியானது. இதனைத் தொடர்ந்து போலீசார், பள்ளி நிர்வாகியையும், அந்த ஆசிரியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு மாணவிகளின் தந்தையை அழைத்து சீருடைக் கட்டணத்தை செலுத்த கூறியுள்ளார் ஆசிரியர். ஆனால், பணம் இல்லாததால் கால அவகாசம் கேட்டுள்ளார் மாணவிகளின் தந்தை.
இதனை அடுத்து, அனைத்து மாணவிகளின் முன்னிலையில் உடைகளை அவிழ்த்து, சீருடை கட்டணம் செலுத்த முடியாத நீங்கள் சீருடை இல்லாமல் சாலையில் செல்லுங்கள் என்று விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.