பெங்களூரு சிறையில் அடுத்தடுத்து ஆய்வு செய்த சத்யநாராயணா மற்றும் ரூபா!!!

First Published Jul 16, 2017, 9:49 AM IST
Highlights
sathyanarayana and roopa inspects prison


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவும், டிஐஜி ரூபாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆய்வு செய்தனர். டிஐஜி ரூபா சிறையில் ஆய்வு செய்யச் சென்றபோது கைதிகள் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு 2 கோடி ரூபாய்  வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதையடுத்த  சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர்  சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அவர் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமாருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சிறைக்கு விசாரணை அதிகாரிகள் ஆய்வுக்கு வரலாம். எனவே, சிறையில் எந்த தவறுகளும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறையில் இயங்காமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என அவர் கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆய்வின்போது, சில முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்து விட்டு வெளியே சென்ற பின்பு, டி.ஐ.ஜி. ரூபாவும் சிறைக்கு வந்தார். சிறையையொட்டி உள்ள பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாபு என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு டி.ஐ.ஜி. ரூபா சிறைக்குள் ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது, சிறை ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு ரூபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  சிறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிறையில் உள்ள கைதிகள் அவருக்கு எதிராகவும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. சிறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு டி.ஐ.ஜி. ரூபா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

டி.ஜி.பி. சத்திய நாராயணராவும் அவரை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரூபாவும் சிறைக்கு வந்து போட்டி ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் சிறைக்கு வந்து விட்டு சென்றதால், அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக டி.ஐ.ஜி. ரூபா சிறைக்கு வந்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருந்தால், அதுபற்றி விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்பதற்காக டி.ஐ.ஜி. ரூபா சிறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

click me!