சத்குருவின் மண் காப்போம் பயணம்... இந்திய மண்ணின் வலிமை உலகுக்கு அறிமுகம்.. பிரதமர் மோடி பெருமிதம்.!

By Asianet TamilFirst Published Jun 5, 2022, 9:54 PM IST
Highlights

மண் வளத்தை மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்ட மோட்டர் சைக்கிள் பயணம் இந்திய மண்ணின் வலிமையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விக்ஞான் பவனில் நடைபெற்ற 'மண் காப்போம் இயக்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், “நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மண் வளத்தை மேம்படுத்துவது மிகமிக அவசியம். மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முன்னெடுப்பில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும். மக்கள் குரல் கொடுத்தால்தான் அரசாங்கங்கள் இதுபோன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த முன் வரும்.

மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் பிரதமர் மோடி முழு ஆதரவு அளித்து பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் பிரதமரை சந்தித்து ‘மண் காப்போம்’ இயக்கத்தின் கொள்கை விளக்க கையேட்டினையும் சத்குரு வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “‘மண் காப்போம்’ இயக்கத்துக்கு என்னுடைய மனமார்ந்த ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த இயக்கம் மனித குலத்துக்கு மிகப் பெரிய சேவை ஆற்றும்.

சத்குரு மேற்கொண்ட 30 ஆயிரம் கி.மீ மோட்டர் சைக்கிள் பயணம் மிகவும் கடினமானது. இந்தப் பயணம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் உலக அளவில் மண்ணின் மீதான அன்பு அதிகரித்துள்ளது. பாரத மண்ணின் வலிமையையும் இந்தப் பயணம் உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது” என்று மோடி தெரிவித்தார். முன்னதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் ‘மண் காப்போம்’ நிகவுக்காக உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களை இந்த இயக்கம் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!