
சிறுமி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உதவியாளர்கள் 2 பேருக்கு தலா 20 ஆண்ட சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 75 வயதான ஆசாராம் பாபு. இவரும், இவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திரிந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டன.
பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறுமி பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி மதுசூதன் சர்மா இன்று தீர்ப்பளித்தார். அவரது தண்டனை விவரங்களை இன்று மாலை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆசாராம்பாபு இருக்கும் ஜோத்பூர் சிறைக்கு நேரில் சென்று தீர்ப்பை நீதிபதி வாசித்தார். மேலும் ஆசாராம் பாபுவின் உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே ஆசாராம் பாபுவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.