காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!

By Manikanda Prabu  |  First Published Feb 20, 2024, 1:12 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாஜகவை வீழ்த்த எதிர்க்ட்சிகள் இந்தியா எனும் பெயரில் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இந்தியா  கூட்டணி கட்சிகளிடையே சுமூகமாக இல்லை.

மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாபில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக இருந்த நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை 80 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான் தொகுதிகளில் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன. ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த அம்மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி பயணித்து வருகிறது. கடந்த கால தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கவே சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது.

எனவே, சமாஜ்வாடி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான சீட் பகிர்வு ஒப்பந்தம் தொலைதூரக் கனவாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புறக்கணித்துள்ளதாகவும், இரு கட்சிகளுக்கு இடையேயான சீட் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரே ராகுல் காந்தியுடன் யாத்திரையில் அவர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. பின்னர், அது 21ஆக குறைந்தது. கடந்த மாதம் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அகிலேஷ் யாதவ் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு, காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்தது. தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது. இதில் உடன்பாடு இல்லை என்றால் தனித்து போட்டியிட அக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி ஜம்மு பயணம்: ரூ. 32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

இதனிடையே, 16 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 11 இடங்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்றும் சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பட்டியலில், காங்கிரஸ் கோரிய லக்கிம்பூர் கெரி, ஃபரூகாபாத் உள்ளிட்ட மூன்று தொகுதிகளும் அடங்கும்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடியாக, இந்தியா கூட்டணியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!