
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி தோல்வியடைந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதில் பாஜக மட்டும் 255 தொகுதிகலில் வெற்றி பெற்றது. கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற சமாஜ்வாடி கட்சி, கூட்டணியாக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சமாஜ்வாடி மட்டும் தனியாக 111 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-இல் மோடி - அமித்ஷா யுகம் தொடங்கியது முதலே உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி முகத்தோடு உள்ளது. இது இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொர்ந்திருக்கிறது. அதேவேளையில் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டிய சமாஜ்வாடிக்கு இந்த முடிவு ஏமாற்றமாகியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாத்வ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அதிக வாக்குகளையும் அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாஜகவின் வெற்றி எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை தேர்தல் மூலம் சமாஜ்வாடி நிரூபித்துள்ளது’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை அகிலேஷ் ராஜிமானா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலில் முதன் முறையாக கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரைவிட 67,504 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அகிலேஷ் வென்றார்.
இதற்கு முன் அகிலேஷ் 2012 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது மேல் சபை உறுப்பினராகத்தான் அகிலேஷ் இருந்தார். கடந்த 2017 தேர்தலிலும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதுதான் முதன் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அசம்கர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், எம்.பி.யாக உள்ளார். தற்போது எம்.பி., எம்.எல்.ஏ. என இரு பதவிகள் உள்ளதால், இதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் எம்.பி. பதவியைத் தக்க வைத்துக்கொண்டு எம்.எல்.ஏ. பதவியை அகிலேஷ் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, கர்ஹால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சோபரன் சிங், அகிலேஷுக்காக இந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்தார். இடைத்தேர்தல் நடக்கும்பட்சத்தில் சோபரன் சிங் மீண்டும் போட்டியிடுவார் என்று சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.