
அச்சத்தைப் பரப்பி சமூகத்தைப் பிளவுபடுத்துவதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம் என்று ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். பாதுகாப்புப் படைகள் தங்கள் கடமைகளைச் செய்ய உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் குறைந்து 26 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டின், பாதுகாப்புப் படை வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பதாவது:
"பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, மாறாக அது சமூகத்தை அச்சத்தால் முடக்க முயல்கிறது. பீதியைப் பரப்பி, சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்கிறது. ஒவ்வொரு மட்டத்திலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதுதான் பயங்கரவாதத்தின் நோக்கமாகும்.
இந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் விரும்பினால், இந்த கூறுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு நீண்டகாலம் தளராத உறுதி வேண்டும். கல்வி, பொருளாதார வாய்ப்புகள், செல்வம் ஆகியவை அனைவருகுகம் சமமாகக் கிடைக்க வேண்டும். சாதி, மதம், அரசியல் சார்புகள் அடிப்படையில் அனைத்து குறுகிய மனப்பான்மையைத் தவிர்த்து ஒரு தேசமாக ஒன்றிணைந்து நிற்பது அவசியம்.
நமது பாதுகாப்புப் படைகள் தங்கள் கடமைகளைச் செய்ய உதவுவதும் மிக முக்கியமானது. தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்."
இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் எக்ஸில் பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்த செய்தியையும் தனது பதிவில் இணைந்துள்ளார்.