
சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்ற முடியாது என்றும், பாராம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஆகமவிதிகளை மீறி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கமுடியாது என்றும் கோவில் நிர்வாகம் கூறி வருகிறது. இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட உள்ளது.