#BREAKING செம்ம குட்நியூஸ்... இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது 3வது கொரோனா தடுப்பூசி..!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 4:14 PM IST
Highlights

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. 
 

தலைவிரித்தாடும் கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை நாடு முழுவதும் 9.4 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருத்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழாவை  நடத்த அனைத்து மாநில அரசுகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்தத் தடுப்பூசி திருவிழாவில் 45 வயதைக் கடந்த அதிகபட்ச நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டிக்கா உத்சவ் எனப்படும் இந்தத் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளான நேற்று மட்டும் நாட்டில் புதிதாக 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி மகாராஷ்டிரா, ஆந்திரா, சட்டிஸ்கர், பஞ்சாப், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள், அதிகமான தடுப்பூசிகளை விநியோகம் செய்யுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. 

தீயாய் பரவி வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இந்த அவசர கால அனுமதியை வழங்கியுள்ளது. ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் பயன்பெற முடியும் என ரஷ்ய நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் ரஷ்ய தடுப்பு மருந்து இந்தியா கொண்டு வரப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 3 வார இடைவெளியில் இரண்டு தவணைகளாக இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 

click me!