கொரோனா பற்றி கொஞ்சமும் கவலை இல்லையா?... படம் பார்க்க குவிந்த ரசிகர்களால் தியேட்டர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 12:41 PM IST
Highlights

அதேபோல் தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள், கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கல்வி பயில அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதேபோல் தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள், கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் போலவே ஒடிசாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை முதல் உத்தரவிட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் முறை முகக்கவசம் அணியாதவர்களுக்கு  2,000 ரூபாயும்,  மூன்றாம் முறை  முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் ஒடிசாவில் அரசின் கட்டுப்பாடுகளை எல்லாம் காதில் வாங்காமல் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களால் 4 தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பர்லங்கமுண்டி நகரில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு வந்த போலீசார் அவர்களை முகக்கவசம் அணியும் படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தினர். ஆனால் யாரும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் டிக்கெட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர், இதையடுத்து போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதேபோல் பல திரையரங்குகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு குவிந்தது. எனவே கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 4 தியேட்டர்களை பூட்டி சீல் வைத்தனர். 
 

click me!