Ukraine - Russia Crisis:சாமர்த்தியமாக ஸ்கெட்ச் போட்ட அரசு..தாயகம் வந்தடைந்த முதல் குழு.. மகிழ்ச்சியில் மக்கள்

By Thanalakshmi VFirst Published Feb 26, 2022, 9:33 PM IST
Highlights

Russia Ukraine Crisis updatesஉக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,உக்ரைன் வான்பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. போர்ச்சூழல் காரணமாக, உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக அண்டை நாடுகளான,ரூமேனியா,போலந்து,ஹங்கேரி எல்லைகளுக்கு வரும் இந்தியர்களை மீட்க உதவி மையங்களை இந்திய தூதரகம் அமைத்துள்ளன. உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் ரூமேனியா நாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த 219 இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட்  நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களை தாயகம் அழைத்து வர,மும்பை விமான நிலையத்தில் இருந்து, இன்று அதிகாலை 3:40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரம் புறப்பட்டது. இந்த விமானம் காலை காலை 10 மணியளவில் புகாரெஸ்ட் நகரத்தில் தரையிறங்கியது.

இதனையடுத்து, உக்ரைனில் இருந்து சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை புறப்பட்டது. இன்று இரவு  9 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது.

தாயகம் வந்தடைந்த 219 பேரையும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் சென்று வரவேற்றார்.இந்நிலையில் ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நள்ளிரவு 2 மணிக்கு தில்லி வரவுள்ளது.  தில்லிக்கு வரும் இரண்டாவது விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் வருகின்றனர்.உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மீதமுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ருமேனியா எல்லை 600 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு செல்ல 11 மணி நேரம் ஆகும். பின்னர் அந்த எல்லையில் இருந்து தலைநகர் புகாரெஸ்டுக்கு செல்ல 9 மணிநேரம் ஆகும். அதேபோல் கீவ்விலிருந்து ஹங்கேரி எல்லையை அடைய 13 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

| Union Minister Piyush Goyal welcomes the Indian nationals safely evacuated from Ukraine at Mumbai airport pic.twitter.com/JGKReJE1ct

— ANI (@ANI)
click me!