Russia-Ukraine crisis :உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது.ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று முழுவதும் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்து வருகிறது.
கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதன் மூலம் உக்ரைனில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசை நீக்கிவிட்டு, தனது ஆதரவு அரசை ரஷ்ய அதிபர் புடின் நிறுவ முயற்சிப்பதாக அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவை எதிர்கொள்ள உதவுமாறு உக்ரைன் அரசு கோரிவரும் நிலையில், உக்ரைனில் இருந்து ரயில்கள், கார்கள் மூலம் வெளியேற அந்நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர்.மேலும் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் ரஷ்யாவின் 30 டாங்கிகள்,7 விமானங்கள்,60 ஹெலிகாப்டர்களும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி உக்ரைனுக்கு எதிராக போரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்றிரவு பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யா வெளியிட்டுள்ளது.மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை உக்ரைன் அண்டை நாடுகளான ருமேனியா,ஹங்கேரி,போலந்து நாடுகளின் வழியே மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் மாணவர்களை அழைத்து வர ருமேனியாவுக்கு 2 ஏர் இந்தியா விமானங்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.