நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் சேவையை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஆர்.எஸ்.எஸ் - பாஜக இடையே கருத்து வேறுபாடு இல்லை என மோகன் பகவத் தெளிவுபடுத்தினார்.
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தன்னலம் கருதாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவை செய்து வருகிறார்கள் என்று பாராட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துக்குச் சொந்தமான மாதவ் நேத்ராலயா ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்க கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கரின் நினைவாக மாதவ் நேத்ராலயா 2014 இல் நிறுவப்பட்டது.
"ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் தன்னலமின்றி பணியாற்றி வருகின்றனர்" என்று மோடி கூறினார். "இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கத்தின் ஆலமரமாக ஆர்எஸ்எஸ் திகழ்கிறது எனவும் அவர் கூறினார்.
"நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது மட்டுமல்லாமல், செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்வதே எங்கள் குறிக்கோள்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற நமது மந்திரம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்றடந்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
"நாட்டின் அனைத்து குடிமக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை. இன்று, ஆயுஷ்மான் பாரத் காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் இலவச சிகிச்சை வசதியைப் பெறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஜன் ஆஷாதி மையங்கள் நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவான மருந்துகளை வழங்குகின்றன. இதன் மூலம் நாட்டு மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் கிராமங்களில் கட்டப்பட்டுள்ளன. அங்கு மக்கள் முதன்மை சிகிச்சைகளைப் பெறுகிறார்கள்," என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். "மக்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையேயான உறவைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்றார்.
ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என ஆர்எஸ்எஸ் உறுப்பினர் சேஷாத்ரி சாரி கூறினார். "சங்கத்தையும் பாஜகவையும் பற்றி எதுவும் தெரியாதவர்கள், பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் பொய்யான விஷயங்களைப் பரப்புபவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இதைச் சொல்கிறார்கள்," என்றும் அவர் கூறுகிறார்.
2014ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மாதவ் நேத்ராலயா மையம், நாக்பூரில் அமைந்துள்ள ஒரு முதன்மையான சூப்பர்-ஸ்பெஷாலிட்டி கண் சிகிச்சை மருத்துவமனை ஆகும். இது மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் நினைவாக நிறுவப்பட்டது.
இந்த மையத்தில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் 14 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இது மக்களுக்கு மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவையை வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.