
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் ஜீன்ஸ் அணிந்து பணிக்கு வந்த அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்கள் ஒழுக்கமாக உடை அணிய வேண்டும், பணி நேரத்தில் குட்கா, பான் மசாலா மெல்லக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை முதல்வர் ஆதித்யநாத் பிறப்பத்து இருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச முதல்வராக ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஒழுக்க நெறிமுறைகளை அறிவித்தார். அதில் குறிப்பாக அரசு ஊழியர்கள் நேர்த்தியான முறையில் உடை அணிய வேண்டும், பணி நேரத்தில் வாயில் குட்கா, பான்மசாலா மெல்லக்கூடாது, அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதாகும்.
இதன் அடிப்படையில் ரேபரேலி மாவட்ட கலெக்டர் சுரேந்திர சிங் நேற்று அலுவலக ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, நில அளவுத்துறையில் பணியாற்றி வரும் அதிகாரி அன்வர் ஹூசைன் குரோஷி என்பவர் ஜீன்ஸ் அணிந்தும், வாயில் குட்கா மென்று இருப்பதை கலெக்டர் சுரேந்திரசிங் கண்டுபிடித்தார்.
அவரை அழைத்து விளக்கம் கேட்கையில் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, கடுமையாக குரோஷியை எச்சரிக்க கலெக்டர் சுரேந்திரசிங், ரூ.500 அபராதமாக விதித்தார்.
இது குறித்து கலெக்டர் சுரேந்திர சிங் வெளியிட்ட அறிவிப்பில், “அரசு ஊழியர்களின் ஒழுக்க நெறிகள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை அனைவரும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறோம். அலுவலகத்தில் ஒழுக்கமின்மையுடன் ஈடுபட்ட ஒரு அதிகாரிக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து இருக்கிறேன்.
இனி முதல்வரின் விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் மிகவும் கன்னியமான உடைகளை அணிந்து வர வேண்டும் ” எனத் தெரிவித்தார்.