
குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா (Robert Vadra) இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் ஒன்றுமில்லை என்றும், விசாரணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
"நான் மக்களின் நலனுக்காக பேசும்போதும், சிறுபான்மையினருக்காக பேசும்போதும், அரசாங்கத்தின் தோல்விகளைப் பற்றி பேசும்போதும், அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போதும், அவர்கள் ஏஜென்சிகளை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று ராபர்ட் வதேரா விமர்சிக்கிறார்.
"இந்த வழக்கில் ஒன்றுமே இல்லை. ஏதாவது முகாந்திரம் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க 20 வருடங்கள் ஆகாது. நான் 15 முறை ஆஜராகி இருக்கிறேன். 10-10 மணி நேரம் விசாரணையில் உட்கார்ந்திருக்கிறேன். 23 ஆயிரம் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். மீண்டும் ஒரு வாரத்தில் 23 ஆயிரம் ஆவணங்களையும் திரும்பக் கொடுக்கச் சொல்கிறார்கள். இது சரியல்ல." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருகிராம் நில வழக்கில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதை அடுத்து, ராபர்ட் வத்ரா தனது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாகச் சென்றார். நடந்தே சென்று ED அலுவலகத்தை அடைந்தார்.
இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு இது இரண்டாவது சம்மன் ஆகும். முன்னதாக, ஏப்ரல் 8ஆம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
குருகிராமில் உள்ள நிலம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை (ED) தனக்கு சம்மன் அனுப்பியதற்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ராபர்ட் வதேரா குற்றம் சாட்டினார். சம்மன் வந்ததை அடுத்து, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றார்.