
Attari-Wagah border Retreat ceremony: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழித்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா பலமான அடி கொடுத்தது. இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லை கடந்த 8ம் தேதி மூடபப்ட்டது.
அட்டாரி-வாகா எல்லை மூடல்
அங்கு ராணுவ வீரர்களின் கொடியிறக்க நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 12 நாட்களுக்கு பிறகு பஞ்சாபில் அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் இன்று முதல் கொடியிறக்க நிகழ்வுகள் மீண்டும் தொடங்க உள்ளன. பாகிஸ்தானின் வாகாவிற்கு எதிரே உள்ள அட்டாரி (அமிர்தசரஸ் மாவட்டம்), ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலா மற்றும் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள சட்கி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கூட்டு சோதனைச் சாவடிகளில் இந்தியக் கொடியை ஒவ்வொரு மாலையும் பிஎஸ்எஃப் படை வீரர்கள் இறக்குவார்கள்.
அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு
ஆனாலும் இரு நாட்டின் எல்லை வாயில்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் பிஎஸ்எஃப் ராணுவ வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள். பிஎஸ்எஃப் படைகளால் ஒவ்வொரு நாளும் கொடி இறக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொது பாதுகாப்பு கருதி இந்த மூன்று இடங்களிலும் இந்த நிகழ்விற்கான பொதுமக்களின் நுழைவை பிஎஸ்எஃப் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் கொடியிறக்க நிகழ்வை பார்க்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அட்டாரி வாகா எல்லையில் 1959ம் ஆண்டு முதல் கொடியிறக்க நிகழ்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை முற்றிலுமாக துண்டித்தது. மிக முக்கியமாக பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதரமே சிந்து நதியை நம்பியுள்ள நிலையில், இந்தியாவின் செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.