
கர்நாடக முன்னாள் முதல்வராக எடியூரப்பா, தலித் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் வீட்டில் சாப்பிடாமல், ஓட்டலில் இருந்து இட்லி, உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் அவருக்கு கட்சிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார். கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து சமூக வாக்குகளை பெறும் நோக்கில் எடியூரப்பா பயணம் செய்து வருகிறார்்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் தலித் ஒருவர் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டார் எடியூரப்பா. இந்த நிகழ்ச்சியின்போது புகைப்படமும் எடுத்து தலித் வீட்டில் சாப்பிட்ட எடியூரப்பா என்று பா.ஜனதாவினர் பெருமை அடித்தனர்.
இதனையடுத்து வெளியாகிய செய்திதான் எடியூரப்பாவையும் பா.ஜனதாவையும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
எடியூரப்பா தலித் பிரிவை சேர்ந்தவர் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு என்று உயர்தர சைவ ஓட்டலில் இருந்து இட்லி, கேசரி, வடை உள்ளிட்ட உணவுகள் வாங்கி வரப்பட்டு அவருக்கு பரிமாறப்பட்டு உள்ளது. இந்த விஷயம் இப்போது வெளியான பின், எடியூரப்பாவின் தலித் ஆதரவு வேஷம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எடியூரப்பாவின் இச்செயலை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் அவருடைய தீண்டாமை செயலை காட்டுகிறது என விமர்சிக்க தொடங்கி உள்ளன. இதுதொடர்பாக எடியூரப்பா மற்றும் பிற பா.ஜனதாவினருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டு உள்ளது.
பா.ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஓட்டலில் இருந்து உணவு வாங்கிவரப்பட்டதை ஒப்புக் கொண்டார்.
“எடியூரப்பாவிற்கு இட்லி மற்றும் வடை என்றால் அதிகம் பிடிக்கும், எனவே அவை ஓட்டலில் இருந்து வாங்கிவரப்பட்டது. மேலும் தலித் பிரிவினர் வீட்டில் செயப்பட்டு இருந்த உணவையும் சாப்பிட்டார்.” என்று அவர் விளக்கம் அளித்தார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்கள் எடியூரப்பாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் பிரியாங் கார்க்கே பேசுகையில், “அரசியல்வாதிகள் தலித் பிரிவினர் வீட்டிற்கு செல்ல கூடாது, இதுபோன்ற வித்தையை செய்யவும் கூடாது. தலித் பிரிவினர் மேம்பாட்டிற்கு உண்மையாகவே உழைப்பவர்கள் என்றால் அதற்கான கொள்கையுடன் வரவேண்டும்,” என கூறிஉள்ளார்.