
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவருக்கு ஏற்ற கட்சி பாஜக தான் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் தனது ரசிகர்களை சச்தித்த நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் குதிக்கப் போவதாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்றுள்ள நிலையில், பாஜக விலிருந்தது தான் அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோர் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ரஜினிக்கு பாஜக வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின்கட்கரியும் ரஜினிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவெடுத்திருப்பதை தாம் வரவேற்பதாகவும், மிகச் சிறந்த மனிதரான ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு பொருத்தமான இடம் பாஜக தான் என்றும் ரஜினிக்கு அழைப்பு விடுப்பதற்கு தனக்கு தனிப்பட்ட அதிகாரமோ அல்லது முடிவு எடுக்கும் பொறுப்போ இல்லை என்றும் நிதின் தெரிவித்தார்.