
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மவுனம் கலைத்து நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘ ரூ.100, ரூ500 நோட்டுகளை அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நேர்மையான மக்களின் துயர்துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
குழப்பமும், மவுனமும்
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குபின் கடந்த 20 நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் மட்டுமே பிறப்பித்துக்கொண்டு இருந்தது. மக்கள் முன் தோன்றி,ரிசர்வ் வங்கி கவர்னர் ஒருமுறை கூட ரூபாய்நோட்டு செல்லாத அறிவிப்புக்கு விளக்கம் அளிக்கவில்லை.
நாளுக்கு நாள் மக்களின் குழப்பமும், பணப்பற்றாக்குறையும் அதிகரித்தது. ரிசர்வ் வங்கியின் முறையான திட்டமிடல் இல்லாததே அனைத்து சிரமங்களுக்கும் காரணம் என வங்கி ஊழியர்கள் சம்மேளமும்குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளும் கடுமையாக ரிசர்வ் வங்கியை விமர்சித்தன. இந்த அளவு களேபரம் நடந்தும் கூட ரிசர்வ் வங்கி கவர்னர் மவுனம் காத்தார்.
இந்நிலையில், ஏறக்குறைய 20 நாட்களுக்குபின் ரிசர்வ் வங்கி கவர்னர் நேற்று மவுனம் கலைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தீவிர கண்காணிப்பு
மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாத அறவிப்புக்குப் பின், நாள்தோறும் சூழ்நிலையை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது. வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் வரிசை குறைந்து வருகிறது. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. அன்றாடச் செலவுக்கு மக்கள் யாரும் சிரமப்படவில்லை.
தீர்க்கப்படும்
ஏ.டி.எம்.களில் மறுசீரமைக்கும் பணியில் 40 முதல் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் போதுமான அளவில் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அவர்களும், அனைத்து கிளைகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வங்கி ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நேர்மையான குடிமக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்
முழுவீச்சு
எஞ்சியுள்ள ரூ.100, ரூ500 நோட்டுகள் ரிசர்வ் வங்கி அச்சகங்களில் முழுவீச்சில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்பட புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் வழங்கப்படும்.
மாற்றுவழி
அதேசமயம், மக்கள் ரொக்கப்பணத்தை மட்டும் நம்பியிருக்காமல், மாற்று வழியான டெபிட் ,கிரெடிட் கார்டுகள், இ-வாலட்களை பயன்படுத்த முயல வேண்டும். இதன் மூலம் பரிமாற்றம் எளிமையாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும். நீண்டகாலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும்.
ஸ்வைப்பிங் மெஷின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரத்தை அதிகமாக வர்த்தகர்களுக்கு கொடுத்து பயன்படுத்த வங்கிகளை வலியுறுத்தி வருகிறோம். ஏனென்றால், டெபிட் கார்டுதான் எதிர்காலத்தில் பரவலாக நடைமுறைக்கு வரும். இவ்வாறு தெரிவித்தார்.