மத்திய அரசு – ரிசர்வ் வங்கி முற்றும் மோதல்…. ராஜினாமா செய்கிறார் ஆளுநர் !!

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 6:44 PM IST
Highlights

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும்  இடையே  ஏற்பட்டுள்ள கடும் மோதல்  காரணமாக வரும் 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, அதன் கடன் வழங்கும் கொள்கைகளை தளர்த்த வற்புறுத்துவதாக குற்றம்சாட்டு எழுந்தது. ரிசர்வ் வங்கியிடம் சேமிப்பாக உள்ள பணத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக தொகையை பெறுவதற்கு மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் அந்த தொகையை வழங்க ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்தால், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக மணி லைஃப் என்ற நிதி சார்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுடனான மோதலில் உர்ஜித் படேல் சோர்வடைந்து விட்டதாகவும், அவரது உடல் நிலை  இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை.

அதே நேரத்தில் உர்ஜித் படேலை பதவி விலக தூண்டினாலும் மத்திய அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படவே வாய்ப்புள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகக்து. 

click me!