
நவம்பர் 8-ந்தேதி செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானதில் இருந்து, 126 முறை விதிமுறைகளை வெளியிட்டு, மாற்றி இருக்கிறதுரிசர்வ் வங்கி. இது ரிசர்வ் வங்கியா அல்லது ரிவர்ஸ் வங்கியா என காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த மாதம் 8-ந்தேதி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் ஒவ்வொரு நாளும் ரிசர்வ் வங்கி புதிய புதிய அறிவிப்புகளை வௌியிட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 19-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், ரூ. 5000 க்கு மேல் வங்கியில் பழைய நோட்டுகளை ஒருமுறை மட்டுமே டெபாசிட்செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, நேற்று அறிவிப்பை மாற்றி, கே.ஒய்.சி. விதிமுறை பின்பற்றி தொடங்கப்பட்ட கணக்குதாரர்கள் மட்டும் செல்லாத ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 30-ந்தேதி வரை எத்தனை முறைடெபாசிட் செய்யலாம் எனத் தெரிவித்தது.
இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா கூறுகையில், “ செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், இந்திய ரிசர்வ் வங்கி, ‘ இந்திய ரிவர்ஸ் வங்கி’யாக மாறிவிட்டது. ரூபாய் நோட்டு அறிவிப்பு வௌியாகி கடந்த 43 நாட்களில், விதிமுறைகளை வெளியிட்டு, அதை 126 முறை மாற்றி உள்ளது''' என்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறுகையில், “ பிரதமர் மோடி உடையைமாற்றுவது போல், ரிசர்வ்வங்கியும் அடிக்கடி விதிமுறைகளை மாற்றி வருகிறது'' எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.