
கர்நாடக டி.ஜி.பி.சத்யநாராயணராவின் மான நஷ்ட வழக்கை சந்திக்க தயார் எனவும் சசிகலாவிடமிருந்து சத்யநாராயணன் ரூ.2 கோடி வாங்கியது உண்மைதான் எனவும் டி.ஐ.ஜி.ரூபா உறுதிபட தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அந்த சிறையை கர்நாடக போலீஸ் டி.ஐ.ஜி ரூபா சோதனை செய்து சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதற்காக சசிகலாவிடம் இருந்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ரூபாவையும் அரசு வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்தது.
ஆனால் ரூபாவின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சத்யநாராயணராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி ரூபா, கர்நாடக டி.ஜி.பி.சத்யநாராயணராவின் மான நஷ்ட வழக்கை சந்திக்க தயார் எனவும் சசிகலாவிடமிருந்து சத்யநாராயணன் ரூ.2 கோடி வாங்கியது உண்மைதான் எனவும் தெரிவித்தார்.
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் தரப்பட்டது பற்றி மட்டுமே அதிகாரி வினய்குமார் விசாரித்ததாகவும் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய புகார் குறித்து வினய்குமார் விசாரிக்கவில்லை எனவும் ரூபா தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ்தான் லஞ்சப் புகார் பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் ரூபா வலியுறுத்தியுள்ளார்.